புதன், 28 மே, 2014

பரிசு பெற்ற கவிதைகள்! (25.5.2014)


தமிழ் என்ற தலைப்பிலான சிவராமன் அவர்களின் கவிதை... (முதல் பரிசுக்கான தகுதியைப் பெற்ற கவிதை...)

தமிழ்!- சிவராமன்

பாட்டும் தொகையும் அகவை பதினெட்டாய்க்
காட்டும் உடலோடு கண்ணிருக்கும் -கட்டழகுப்
பெட்டகமே! ஊற்றெடுத்துச் சொட்டுதடி உன்மேனி
தொட்ட இடமெல்லாம் தேன்!

முடிகெழு வேந்தர் மடிதனில் பொன்னின்
கொடிபோல் வளர்ந்த குயிலே! -இடிதான்
விழுந்துடல் சாய்ந்தாலும் உன்குரல் கேட்டால்
எழுந்து துடிக்காதோ நெஞ்சு!

புலர்ந்து மிளிரும் பொழுதின் கதிராய்
மலர்ந்து மணந்தாய் மனதில் -உலர்ந்தேன்
உயிரும் வறண்டேன்; இனிமேல் தமிழே!
உயர்வாய் எழுவேன் உயிர்த்து!

முத்தும் பவளமும் முந்நீர் கரைசேர்க்கும்
அத்தனையும் என்றன் அரசிநீ; -மொத்தமாய்த்
தந்ததமிழ் நூல்களன்றோ! தந்தும் தளர்வின்றி
வந்துதமிழ் கோலோச்சும் வான்!

காடழியும்; காற்றழியும்; காயும் நெருப்பழியும்;
நாடழியும்; வானழியும்; நல்லனவாம் -ஏடழியும்;
என்றும் அழியாள் யாவிற்கும் மூத்ததமிழ்
நின்று விளங்குவாள் நீடு!

கவிஞர் சிவராமன்...தமிழ் என்ற தலைப்பிலான சின்தன. பாலு சாமி அவர்களின் கவிதை... (இரண்டாம் பரிசுக்கான தகுதியைப் பெற்ற கவிதை...)

தமிழ்! -சின்தன. பாலுசாமி.

கல்மண் தோன்றிய காலத்தே
நல்லுயிர் தோன்றியதாம்
நல்லுயிர் மெல்ல வாய் திறக்க
உன்மொழி தோன்றியதாம்
உண்மையில் உலகின் முதல்மொழி
உன்வழி தோன்றியதாம்
தமிழ் மொழியே உன் வழி தோன்றியதாம்...

மனித வாழ்வினிலே
அகமுண்டாம் புறமுண்டாம்
அனைத்தும் நம் தமிழில் உண்டாம்
உயிரும் மெய்யும் கலந்து உயிர்மெய்யாம்
அவ்வழியே அமைந்ததே!
நம் உடல் இயங்கும் முறையுண்டாம்...

சங்கமிரண்டும் கடல்கோள் கொண்டதாம்
அதில் தமிழ்மட்டும் கரைகண்டதாம்
சிவன்வழி தந்ததாம்
அகத்தியன் வாய்மொழி வந்ததாம்

இலக்கியம் இலக்கணம் கொண்டமொழி
காப்பியம் கதைகளும் நிறைந்தமொழி
கருத்தாழமும் கவிகளும் பொதிந்தமொழி
தமிழ் தமிழ் எனச் சொல்கையிலே
அமிழ்து அமிழ்து எனச் சுவைதருதே!
அந்தமொழி எங்கள் அன்னைமொழி!

அம்மொழி
பேச்சிலும் அச்சிலும் முதல்வந்தமொழி
இன்று பெயரிலும் சொல்லிலும் தன்னைத் திரியும் மொழி
என் அன்னை மொழியே!
உன்னை அழிவாய் என்று நினைப்பவர்க்கு
நீ அறமாவாய்
தமிழின் மறமாவாய்...

சின்தன. பாலுசாமி.வரதராஜ பெருமாள் அவர்களின் கவிதை... (மூன்றாம் பரிசுக்கான தகுதியைப் பெற்ற கவிதை...)

தமிழ்.! -வரதராஜ பெருமாள்

அழகுடனே ஆதிமுதல் பழகும்மொழி தமிழா! இலை
அழும்சேயும் தாலாட்டாய்க் கேட்பதுதான் தமிழா!

உளம்மேவ எனைவந்து உட்கொண்டது தமிழா! -இலை
சினம்கொண்ட மனிதனைச்சீர் அமைத்ததுதான் தமிழா!

காவியமும் சரித்திரமும் கண்டமொழி தமிழா! -இலை
எழுத்தாணி கவிஞனெல்லாம் உண்டமொழி தமிழா!

வான்மேகம் இளமதியை வர்ணித்தது தமிழா! இலை
ஆன்மீக மாய்வந்து ஆட்கொண்டது தமிழா!

நீதிக்கதை சொல்லியெனை நிமிர்த்தியது தமிழா! -இலை
சாதிமதம் இல்லையென சமர்பித்தது தமிழா!

பாரதிபோல் பாக்கவியும் பார்த்ததுதான் தமிழா! -அவன்
பாரதத்தைக் காப்பதற்குக் கோர்த்ததுதான் தமிழா!

கம்பன்கண்ண தாசனுமே கையாண்டது தமிழா! -அதைக்
கண்டுநான் சேவித்துஎன் மெய்யாண்டது தமிழா!

கொண்டவரை நூலாகக் குவித்ததுவும் தமிழா! -அது
கண்டவரை ஆலாகக் காப்பதுதான் தமிழா!

இயலிசை நாடகமிம் மூன்றும்முத் தமிழா! -இக்
கலையுலகை நாட்டக்கை கொடுத்ததுதான் தமிழா!

குருதியொடு வள்ளுவத்தை கோர்த்ததுதான் தமிழா! -நீ
இறுதியில்ஒப் பாரிஎனக் கேட்பதுதான் தமிழா!

கரைகண்ட நூல்களையே கண்டுபிடி தமிழா! -அதன்
கருத்துந்தன் வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் தமிழா!

பிறமொழியின் சப்தத்தொடு பின்சொல்லும் தமிழா! உன்
பொற்றோர்கள் இருவருமே பேசுவது தமிழா?

தி. வரதராஜ பெருமாள்
அத்தியூர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக