ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களி கவிதை...
ஆதி மனிதன் வெட்கப் பட்டான்
ஆடை பிறந்தது
பட்டையாய்... இலையாய்... தோலாய்...
பிறந்த மனிதர்கள்
மண்ணைத் தொடுமுன்
தொட்டனர் உன்னை...
நாங்கள் உருமாறும்போது
நீயும் மறவாமல் மாறுகிறாய்
எங்கள் விருப்பத்திற்கு இணங்க...
பருவத்திற்கு மட்டுமா உன்னை
மாற்றிக் கொண்டு மகிழ்கிறோம்?
பருவகாலத்திற்கும்தான்...
அணிவது மனிதர்கள் மட்டுமா?
மயிலுக்குப் போர்த்தினோம்...
குரங்கிற்கும் கொடுத்தோம்...
ஆள்பாதி ஆடைபாதி என
அடைமொழி பிறந்தது
அதில் ஆடையே சிறந்தது...
சிலருக்குப் பட்டாடையில்
பவனி செல்கிறாய்...
பலருக்கு வட்டாடையில்
வாழ்க்கை தருகிறாய்...
பிறப்பு முதல் இறப்பு வரை
பிணைந்தோம்
முன்னதில் நான் கட்டிக் கொள்கிறேன்...
பின்னதில் என்னை கட்டிச் செல்கிறாய்...
புத்தாடை அணியும் போது
புத்துணர்வு வருகிறது -ஆம்
அது
நீ பிறந்த பூவின் மணம் தருகிறது...!
---
ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வியின் கவிதை...
இருப்பவன் கிழித்துப் போடுகிறான்
இல்லாதவன் கிழிந்ததைப் போடுகிறான்
மனிதன்
நாகரீகத்தை
பண்பாட்டை
கலாச்சாரத்தை
வசதியை
வறுமையை
எளிமையை
தன்மையை -எனப்
பலவற்றையும் அடையாளம் காட்டும்
கண்ணாடியாய்...
மனிதர்களால் -நான்
அடையாளம் பெறவில்லை
என்னால்தான் அவர்கள்
அடையாளம் பெறுகிறார்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக