புதன், 30 ஜூலை, 2014

‘விதைநெல்’- நூல் திறனாய்வு! – (27.07.2014)
‘விதைநெல்’- நூல் திறனாய்வு! –கவிஞர் தி. வரதராஜ பெருமாள்.

      சூரியனின் வருகைக்கு விட்டில் பூச்சியின் வரவேற்பா? களிறுகளின் அணிவகுப்பில் கட்டெரும்பின் கட்டளையா? நான் விட்டில் பூச்சியா? இல்லை கட்டெரும்பா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் கண்களுக்கு பூமாலை மணிவண்ணன் ஐயா அவர்கள் எழுத்தில் ஒளிசேர் கதிராக… நடையில், கருத்தில் பலம்சேர் களிறாகத் தோன்றுகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

      முத்தமிழ் பூவுலகில் மூன்றாம் தமிழ் வளர்க்கும் நற்றமிழ் காக்கும் உமக்கா!!! இக் கல்லா ஒருவனின் ஆய்வுரை?!!

சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடுவந்து சேராது என்பார்கள். அதுபோல் மணிவண்ணன் ஐயா அவர்களின் ‘விதைநெல்’ நூலை ஆய்வுரைக்கு என்னிடம் கொடுத்திருப்பது எனக்குப் பெருமையானாலும் அவருக்குச் செறுமை என்றே என் இதயம் மொழிகிறது.

      மொழிந்த இதயத்தையும் அழைத்துக்கொண்டே கடந்து சென்றேன் ‘விதைநெல்’லை, கடந்த உடன் நான் தெரிந்து கொண்டேன் நூலைக் கடந்தது நானல்ல… நூல்தான் என்னைக் கடந்தது என்று…

      சதை ஆண்ட என் உடலைக் கடக்கும் பொழுதுகளில் அவரின் கதையாண்ட அனுபவத்தைச் சொன்னால் ஆராது. சொன்னால் தீராது.

      நாவல், சிறுகதை, இவைகளை நான் படிக்கத் தொடங்கும் முன் கதையின் கரு மனதின் எதிர்பார்ப்பாக இருக்கும். படித்து முடித்தவுடன் ஓரிரு வரிகளில் அந்தக் கதையைச் சொல்லிவரும் அளவிற்கு என் எண்ணத்தோடு சேர்ந்து என் இதயமும் சுருங்கிவிடும்.

      ஆனால் ‘விதைநெல்’லை நான் கடந்து வந்த ஒவ்வொரு மணித்துளிகளிலும் மனித மனதில் ஏற்படும் மனதால் ஏற்படும் ஒவ்வொன்றையும் ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்துக் கொண்டே கடந்து வந்தேன்.

      காரணம் ஆற்றைக் கடக்கும் பொழுது காலில் மோதியது மீனா இல்லை அரவா என்று எண்ணும் மனம் நம்மைக் கடக்க விடாமல் சற்றே நின்று நம்மை யோசிக்கத் தூண்டும். அதுபோல் ‘விதைநெல்’லை நான் கடக்கும் போது என் இதயத்தில் மோதிய ஒவ்வொன்றும் விதைக்கப்பட்ட நெல் மணிகளாய் ஆங்காங்கே இதயத்தில் முளைவிட்டுக் கிடக்கிறது. பிடுங்கி எறிய மனமில்லை. காரணம் விதைநெல்லாயிற்றே… பிடுங்கி எறிந்துவிட்டால் உணவுக்கு நான் என்ன செய்வது? என்றுதான் ஆம் முத்தமிழ்ச் சுவைகளில் மூன்றாம் தமிழ்ச் சுவைக்குக் காத்திருக்கும் என் மனதிற்குச் சரியான உணவு இந்த ‘விதைநெல்’.

      ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது எந்த ஒரு மனமும் நிலையாக இருப்பதற்கும் நிலையற்றிருப்பதற்கும் எழுத்தோட்டமே காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

      ஆனால் பூமாலை மணிவண்ணன் அவர்களின் மூன்றாம் தமிழ் நூலாம் ‘விதைநெல்’ அவைகளில் இருந்து சற்றே மாறுபட்டு நிற்கிறது.

                அவர் நூலை நான் வாசிக்கும் நேரம் நீண்டு கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் விதைநெல்லைப் பசியோடு வாசித்துக் கொண்டே நான் கடந்து சென்ற பாதை யெல்லாம் நற்றமிழ் பசிக்கு விருந்தாக அமைந்த அவரின் வரிகளை நான் புசித்துக் கொண்டே சென்றதுதான்.

      தலைப்புக்கே உரிய நாடகக் கதை, கதைக்கே உரிய கதாபாத்ததிரங்கள், கதாபாத்திரங்களுக்கென்றே அமைக்கப்பட்ட பெயர், பெயருக்கே உரிய கதாபாத்திரத்தின் குணங்கள், குணத்திற்கே உரிய வசனங்கள்…

      இப்படி அவரின் எழுத்தோட்டத்தில் இடம் பிடித்த ஒவ்வொன்றும் தனக்கே ஒரு தனி இடம் பிடித்து நூலிலும் நூலைப் படிக்கின்ற மனங்களிலும் கம்பீரமாக உலாவந்து கொண்டிருப்பது தமிழின் விந்தையா? அல்லது தமிழை முறையாக பாவித்த அவரின் கைவண்ணமா? என்ற கேள்வி ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் அடுக்கடுக்காய் என் இதயத்தில் உயர்ந்து நிற்கிறது.

பெரும் பாலும் சாதாரன உலக நுகர்ச்சிகளிலேயே தாவிச் செல்லும் மனித மனத்தை, தன்பால் கவர்ச்சித்துக் கொள்பவன்தான் உண்மையான எழுத்தாளன். அப்படி ஒரு அசாத்தியத் திறமை ஐயா அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

      சமூக மேடை நாடகங்களை நூலாக மாற்றுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் நூலைப் படிக்கும் பொழுது காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மொழி ஆளுமையும் சொல்லாளுமையும் பயிற்சியால் வருவதல்ல என்பது திண்ணம்.

சமுதாய வளர்ச்சியில் மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு முடிவெடுப்பதும் யுக்திகளைக் கையாள்வதும் இயல்பானதே. ஆனால் எந்த ஒரு முடிவினை எடுப்பதற்கும் அவனுக்கு வயதோடு கூடிய அனுபவமும் கணக்கிடும் மனப்பான்மையும் தேவை என்பதுதான் உண்மை.

      முதலாம் நாடகக்கதையான விதை நெல்லில் அக்கருத்தை நேர்த்தியாகவும் மென்மையாகவும் குழந்தைக்கு நிலாச்சோறு கொடுப்பதைப்போல் ஊட்டி இருப்பது படிக்கும் மனதை அவர்பால் இழுக்கும் காந்தக் கரு.

      அன்பு, பாசம், அரவணைப்பு, இந்த வார்த்தைகளுக்கெல்லாம் பொருத்தமான வார்த்தை எதுவெனக் கேட்டால் தாய் என்றுதான் கூறுவேன்.

      அப்படி ஒரு தாய் தன் மகனையும் மருமகளையும் விட்டுவிட்டு முதியோர் இல்லத்தில் வாழ்த்துகொண்டு இருக்கும் பொழுது அவளின் மனோநிலை எப்படி இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனால் பூமாலை மணிவண்ணன் ஐயா அவர்கள் உருவாக்கிய கமலா என்கிற தாய் கதாபாத்திரம் முதியோர் இல்லத்தில் வாழ்த்துகொண்டு இருக்கும் போது தனது பார்வையை பெற்ற பிள்ளைகள் மீது செலுத்தாமல் சமுதாயத்தின் மீது செலுத்துவது என்னை மட்டுமல்ல படிக்கும் ஒவ்வொரு மனதையும் மெய் சோரவைக்கும் மின்சாரம் என்பது உண்மை.

      இந்த நாடகத்தின் முதலாவது காட்சியை நான் படிக்கும் போது, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது அதனால்தான் இப்படி பேசிக்கொள்கிறார்கள். என்று படிக்கும் கண்களை அடுத்த வரிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி யோசிக்க வைக்கும்படி மிகத் துல்லியமாகவும் நிதானமாகவும் தமக்கே உரிய எழுத்தோட்டத்தில் கொடுத்திருப்பது கப்பலைமட்டுமல்ல கடல் கொந்தளிப்பையும் சேர்த்து நிறுத்தும் நங்கூரம் என்றுதான் கூறவேண்டும்.

      அது மட்டுமல்லாது சமூக வழக்கில் அவர் எழுதி இருக்கும் ஒவ்வொரு வசனங்களும் அதை பேசும் கதாபாத்திரத்தின் வெளித்தோற்றத்தைக் கூட மிகத் துல்லியமாக ஆழ் மனதில் படம் பிடித்துக் காட்டுவது அவர் மொழியைக் கையாண்ட விதத்தைப் பிரதிபலிக்கிறது.

      சுயநலத்தை மட்டுமே இலக்கென்று எண்ணி உலாவும் மனிதமனத்தில் ஏதோ ஒருசிலர் பார்வை மட்டுமே சமூக நோக்கில் விழும், அதில் யாரோ ஒருவர் மட்டும் வெற்றியைக் கண்பார்கள்.

      அவ்வாறு வெற்றியின் காண்பவர்களுக்கு ஏற்படும் சமுதாய சிக்கல்கள், மன உளைச்சல்கள், பொருளாதார சிக்கல்கள்… நச்சினார்க்கினியன் என்ற கதாபாத்திரம் மூலம் விளக்கியிருப்பது இரும்பைக் கரைக்கும் எழுத்தோட்டம் என்றுதான் கூற வேண்டும்.

      காதலனும் காதலியும் தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் குரலை உயர்த்திப் பேசினாலோ, தாழ்த்திப் பேசினாலோ அல்லது உச்சரிப்பில் ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ அவர்களின் மனோ நிலையை நாம் கணக்கிட முடியும். ஏன் என்றால் அதுதான் காதல்.

      விதை நெல்லில் இருக்கும் சிறுசிறு தொலைபேசி உரையாடல்களைப் படிக்கும் போது அதைப் பேசும் கதாபாத்திரத்தின் மனோநிலையைக் கூட கண்முன்னே நிறுத்தும் கற்பனைத் திறன் காற்றில் வரைந்த ஓவியம் என்றுதான் கூறவேண்டும்.

      எந்த ஒரு நூலும் மனிதச் சார்புடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ படித்தோம் பக்கங்களைப் புரட்டினோம் என்று எண்ணும்படி எண்ணங்களை ஆக்கும் நூல்களே பெருவாரியான நூல்கள். மேலும் கருத்துச் செறிவுடைய நூல்களை ஏறக்குறைய மனிதனும் விரும்புவதில்லை.

      ஆனால் விதைநெல்லில் ஒரு பக்கத்தைப் படித்து விட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டுவதற்கு முன் அவரின் விவேகமான எழுத்தோட்டம் மனதைப் படிக்க ஆரம்பித்து விடுகிறது. பக்கங்களோடு சேர்ந்து துக்கங்களும் புரண்டு விடுகிறது. நூலைப் படித்து முடித்து வெளியே வரும் மனம் ஓர் அருவியில் குளித்ததுபோல் அழுக்கற்று வெளியே வருகிறது.

      மொத்தத்தில்…

இதயத்தில் விதைத்த
இந்த விதைநெல்லில்
களைகளைப் பிடுங்கத்
தேவையில்லை –ஆம்
களைகளை அழிப்பதற்கே
விதைக்கப்பட்ட நெல்தான்
இந்த
விதைநெல்…

நன்றி

தி. வரதராஜ பெருமாள்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக