முதற்பரிசு பெற்ற கவிஞர் பொன். கர்ணன் அவர்களின் கவிதை...
எழுதுகோல்! –கவிஞர் பொன். கர்ணன்
அகத்தியர் கையில் இருந்தபோது
மருத்துவம் கொடுத்தாய்…
தொல்காப்பியன் கையில் இருந்தபோது
இலக்கணம் பிரித்தாய்…
சாணக்கியன் கையில் இருந்தபோது
நீதி உரைத்தாய்…
வள்ளுவன் கையில் இருந்தபோது
முப்பால் தெளித்தாய்…
கம்பனின் கையில் இருந்தபோது
இதிகாசம் தந்தாய்…
காரல் மார்க்ஸ் கையில் இருந்தபோது
மூலதனம் பகிர்ந்தாய்…
பாரதி கையில் இருந்தபோது
தேசியம் கோர்த்தாய்…
கண்ணதாசன் கையில் இருந்தபோது
காதல் கசிந்தாய்…
வைரமுத்து கையில் இருந்தபோது
வாழ்வியல் பதிந்தாய்…
இந்த
மக்குப்பயல் கையில் வந்து
என்னப் பண்ணத் துடிக்கிறாய்
எழுதுகோலே?!!!
-பொன். கர்ணன்.
----
இரண்டாம் பரிசைத் தட்டிச்சென்ற கவிஞர் சிந்தனைச் செல்வி அவர்களின் கவிதை...
எழுதுகோல்! -சிந்தனைச் செல்வி
விரல்கள் எழுதுகோலானது ஆதிகாலத்தில்…
கற்கள் எழுதுகோலானது கற்காலத்தில்…
எழுத்தாணி எழுதுகோலானது ஓலைச்சுவடிகாலத்தில்…
மயிலிறகு எழுதுகோலானது மன்னரது காலத்தில்…
வண்ண மைகள் எழுதுகோலானது விஞ்ஞான காலத்தில்…
அச்சுக்கள் எழுதுகோலானது இக்காலத்தில்…
இப்படி
அக்காலம் தொட்டு இக்காலம் வரை
உனக்கொரு இடம் தக்க வைத்தாய்!
உன்னால் பலருக்குப்
பல அதிகாரம் கிட்டவைத்தாய்…
உன் முனையைக்
கத்தியை விடவும்
கூர்மையானது என்கிறோம்
இல்லை இல்லை
எழுதுவோனின் எண்ணங்களே
உனக்கு வலிமை சேர்க்கின்றன…
சிலம்புச்செல்வி.
----
மூன்றாம் பரிசைத் தட்டிச் சென்ற கவிஞர் த. காசி வினோதன் அவர்களின் கவிதை...
எழுதுகோல்! -கவிஞர் காசி வினோதன்.
எண்ணங்களை எழுத்துக்களாக மாற்றுபவனே!
எனது கற்பனைகளைக் கதைகளாகவும் –காதல்
கவிதைகளாகவும் உருமாற்றுபவனே!
உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை –உன்
‘உயிர்’ மையைக் கொடுத்து
உயிர் எழுத்துக்களாகச் செதுக்குபவனே!
தேர்வில் மாணவர்களுக்கு
நீ ஒரு நம்பிக்கை…
அலுவலகங்களில்
நீ ஒரு நாயகன்…
கவிஞர்களின் பார்வையில்?
படைப்பவன் இறைவன் தானே!?
எழுத்துக்களைப் படைப்பவன்
எழுதுகோல் என்றால்
கவிஞர்களின் கடவுள்
‘எழுதுகோல்’
த. காசி வினோதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக