மரப்பாச்சிப் பொம்மைகள் நூல் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையைப் பகிர்கிறார் கவிஞர் சிவராமன் அவர்கள்...
அவரது ஆய்வுக் கட்டுரை வருமாறு...
மரப்பாச்சிப் பொம்மைகள்! நூலாய்வு! -கவிஞர் சிவராமன்
கவிதை ஒவ்வொரு மனதிற்குள்ளும் மறைந்து கிடக்கிற மதுத்துளி. அதனை கவிஞர் காகித கூடுகளில் சேமிக்கிறான். பாகு சேர்க்கப் படாத தேன் எவ்வாறு காலம் கடந்து நன்மைகள் பல பயக்குமோ அவ்வாறு நற்கவிதை ஆண்டுகள் ஆயிரம் கடந்தபோதும் நவிலுதற்கு இன்பம் பயக்கிறது.
காலம் ஈன்றெடுத்த கவிப் பெருமக்களின் வரிகள் ஞாலத்தில் வைரத்தையும் துணித்து விடுகிற வலிமை பெற்றிருக்கின்றன. உள்ளக் குமுறல்களினால் தெறித்து விழுந்த வார்த்தைகள் உலகையே ஆட்டிப் படைத்திருக்கின்றன. காலத்திற்கேற்ப கவிஞர்களின் பாடு பொருள் மாற்றம் காண்கிறது.
புரலாமல் கிடக்கும் சமூகத்திற்கு நெம்புகோலாய் நிற்கிறது. கவிதைகளில் கோர்க்கப் பட்டிருக்கிற வார்த்தை மலர்கள் அதனைக் கோர்த்தவனின் இரத்தத்தில் விளைந்தவை. இருபதாம் நூற்றாண்டுப் புதுக்கவிதை வளர்ச்சியின் காரணமாகத் தோற்றமெடுத்த கவிஞர்கள் ஏராளம். சமூக அவலங்களைக் கண்டும் மாற்றமிலா மனித்ததினைக் கண்டும் ஆதங்கத்தினால் அவதரித்த கவிஞர்களிடையில் கவிஞர் தியாக. ரமேஷ் அவர்களின் ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’ என்ற நூலானது எளிமையான வரிகளில் வலிமையான கருத்துக்களைச் சுமந்து நிற்கிறது.
உடைமைகளுக்காகவும் உயர்வுக்காகவும் தன்னிடம் விட்டுத் தனியிடம் சேருகின்ற மனிதன் தன்னைப் பற்றி நினைக்கவே நேரமில்லாத பொழுது தன் சமூகத்தினையும் தேசத்தினையும் எண்ணிப் புலம்புவதரிது. நம்மவர்களுக்கு ஒரு நினைப்பு வெளிநாடு என்று எவரேனும் ஏகிவிட்டால் அவர்களை இமய உயரத்தில் வைத்து விலகி நிற்பது. பணம் ஒன்றுமட்டும் பாசத்தைத் தருவதில்லை. என்பதை அன்னிய தேசத்தில் அல்லல் படுபவர்கள்தான் அறிவார்கள். அப்படி அல்லல் படுகிற மனிதர்களின் ஒருமித்த உள்ள வரிகள் இதுவாகத்தான் இருக்க முடியும்…
மகளுக்கோ மகனுக்கோ
தரும் முத்தம்
கன்னத்தில் விழுவதில்லை
காதில்…
(இக்கவிதையில் மனைவிக்கோ என்ற அந்த ஒற்றைப் புனிதச் சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம் விரசமாகாது. எனினும் இங்குக் காதலைப் பாசம் வென்று விடுகிறது என்ற வகையில் உள்ளதை உள்ளவாறே ஏற்றுக்கொள்வோம்.)
‘அவனுக்கு என்னப்பா வெளிநாட்டுல இருக்கான்’
இப்படி ஆயிரம் வார்த்தைகளை
உங்களின் மனநாக்கு பேசும்…
மொட்டு வெடிக்கும் ஓசை
கேட்காததுபோல்…
எங்கள் இதயம் வெடிக்கும் ஓசை
உங்களில் யாருக்குக் கேட்கும்…?
உறவுகளே!
எங்களைக் காசாக மட்டும் பார்க்காமல்
நேசமாகவும் பார்க்கப் பழகுங்கள்…
தேசம் விட்டுத் தேசம்
பொருள் தேடிப் பறந்தாலும்
நீங்கள்தான் நாங்கள்
இளைப்பாறும் வேடந்தாங்கள்…
உண்மையான வரிகள். தாங்கிய மண்ணின் பாசத்திற்காகவும் தவழ்ந்த மடியின் வருடலுக்காகவும் உயிரில் கலந்த உறவுகளோடும் உதிரம் கலந்த சொந்தங்களோடும் உள்ளம் பரிமாறிக் கொள்ளத் தவித்துக் கொண்டுதானிருக்கிறது.
வேறொரு மண்ணில் தற்காலிகமாக வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் சிங்கப்பூரின் பெருமைகளைச் சொல்கிறார். அதனுடைய வளம், வானுயர்ந்த கட்டிடங்கள், நேர்த்தியான சாலைகள், நாகரீகம் எனச் செல்வச் செழிப்பு மிக்க நகரத்தினை அவர் சொல்கிறபோது இமைகளை விரிய வைக்கிறது. அதே நேரம் இவ்வளவு வசதிமிக்க நாட்டில் வாழ்ந்த போதும்…
உயரத் தூக்கிப் போட்டாலும்
மீண்டும் மண்மடியில்
விழும் கல்லாய் உன்மடியில்
வந்து படுப்பேன் அம்மா…
என்று பிறந்த இடத்தின் பாசத்தோடு உருகுகிற வரிகள் விழிகள் நனைக்க வைக்கிறது.
பெற்ற தாயினையும் உற்ற உறவுகளையும் பிரிந்து வேறுநாடு சென்றுவிட்டோம். அங்கு ஓய்வு என்று உறங்கிக் கிடக்காமல் தன்நிலை உணர்ந்து உழைக்கப் புறப்படுவோம் என்ற அழைப்பினை விடுக்கும் கீழ்காணும் கவிதை வரிகள், ‘நீ ஒத்திவைக்கும் ஒவ்வொரு வினாடியும் உனது வெற்றி ஒத்திவைக்கப் படுகிறது.’ என்ற வைரமுத்தின் குரலோடு ஒலிக்கிறது.
பயனில்லை என்று படுக்காதே
இன்று வேலைக்குச் சென்றால்
இரட்டைச் சம்பளம்
எழுவாய் தோழா! எழுவாய்!
எதிர்கால வண்ணக் கனவுகளுடன்
கல்லூரிக்குச் செல்லும் தம்பி…
வாழாமல் வந்திருக்கும் அக்கா…
வாக்கப்படக் காத்திருக்கும் தங்கை…
இரண்டு கறவைமாடு வாங்கினா
மாசம் நாலுகாசு சம்பாதிக்கலாமுன்னு
கணக்குப் போடும் அம்மா…
எனக்கென்ன ‘என்தம்பி சிங்கப்பூரில் இருக்கான்’னு
அடாவடி பேசி ஆர்ப்பரிக்கும் அண்ணன்…
இப்படி ஒவ்வொரு உறவுகளின் உள்ள எதிர் பார்ப்புக்களையும் எடுத்து நினைவூட்டி எழுந்து செல்ல உரம் கொடுக்கிறது.
புதிய புதிய மதங்கள், கொள்கைகள், தலைவர்கள் என்று மனிதனது வரலாறு பேசுகின்றது. உலகின் சமயங்கள் சடங்குகளினாலும் சம்பிரதாயங்களாலும் அஃது வேறுபட்டு நின்ற போதிலும் மனம் செம்மைப் படுவது, படுத்துவது என்பதே அவற்றின் குறிக்கோல். உலகில் எத்தனை விரைவாகப் பயனிக்கக் கூடிய வாகனங்கள் வந்த போதிலும் மனத்தினும் விரைவான ஒன்று இதுவரையும் இதன் மேலும் இல்லை. அந்த மனத்தை சீர்படுத்த முடியுமே தவிர சிறைப்படுத்துதல் அரிது.
தட்டுங்கள் மெல்லத் தட்டுங்கள்
சுவரை விட்டுவிட்டு
கதவைத் தட்டுங்கள்
கதவு திறக்கும்
கதவைத் தட்டியும்
திறக்கவில்லையா
சுவரென்று விட்டு
விலகுங்கள்
கதவை நோக்கி…
இவ்வரிகளில் வெற்றிக்கான கதவுகள் வெவ்வேறு இருக்கின்றன ஒரே இடத்தில் நிற்காதீர் வேறு இடத்திலும் முயலுங்கள் நிச்சயம் கதவு திறக்கும் என்கிறார். ஆனால் சில வீடுகளுக்கு ஒரே கதவுதானே இருக்கிறது என்ன செய்வது?
கவிஞர் சொல்கிறார்…
மூடிய கதவை
மோதியும் திறக்கலாம்…
ஏனென்றால்
மூடி திறப்பதுவே
உயிர்ப்பு…
சில கவிதைகளின் உள் அர்த்தங்கள் ஆன்மீகத் தத்துவங்களில் அவர் கொண்ட ஈடுபாடுகளையும் அனுபவங்களையும் சொல்கின்றன.
அரசியல் மைவித்தைகளையும் தனது ஏக்கங்களையும் அனுபவங்களையும் எளிய நடையில் தன்னகத்தே கொண்டு உயிர்ப்போடு ஏட்டு முகம் திறக்கின்றன ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’ தமிழுக்குத் தாலாட்டுப் பாடுகின்ற தாய்மையோடு தாய்நாட்டின் அனுபவங்களோடு பிரசவமாகியிருக்கிற இப்புத்தகம் மண்ணின் வாசனையைத் தனது ஏடுகள் எங்கும் நிரப்பி நிற்கிறது.
தனது காதலை நெல் அரிகளோடும் கூழாங் கற்களோடும் ஒப்பிடுவதை மனம் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறது. காதலில் தோற்ற கவிஞனின் கண்ணீரின் வாசனை சற்றே சில இடங்களில் வெளிப்படுகிறது. மேலும் சொந்தங்களையே மறந்துவிடும் இக்காலத்தில் தன்னுடன் பழகிய உறவுகளுக்கு ஏட்டு ஊஞ்சலில் இளைப்பாற இடம் தந்திருப்பது சிறப்பு.
இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் வட்டார வழக்குச் சொற்களை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். ஆனால் வட்டார வழக்கு மொழிகளை அதிகம் கையாளத் தேவையில்லை என்று சொல்லலாம். ஏனெனில், பேச்சு மொழியிலிருந்தே எழுத்துமொழி கிளைத்தது. ஒரு கரடுமுரடான நிலையிலிருந்து செம்மை நிலைக்கு ஒருமொழி உயர்ந்த பின் மீண்டும் அதைக் கரடுமுரடான நிலைக்கே பின்நோக்கி இழுத்தல் சரியா? என்பதில் பலருக்கும் பலவாரான முரண்பாடு இருக்கிறது.
மேலும் ஒரு இலக்கியத்தைக் குறிப்பிட்ட பகுதியிலேயே அது முடக்கிவிடும். இந்த வட்டார மொழி வடிவம் திருட்டிப் பொட்டைப் போன்றது. அது கவிக்குழத்தையின் கன்னங்களில் தேவையான இடங்களில் இருக்கும் வரை அழகுக்குக் குறைவேதும் இல்லை.
உள்ளத்துள்ளது கவிதை –இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் –இன்பம்
தெரிந்துரைப்பது கவிதை!
என்பது போலத் தனது உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்துக் கொடுத்திருப்பதனால் உயிர்ப்போடு உலாவரும் இந்த ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’
நன்றி
கவிஞர் சிவராமன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக